திருப்பூர்: கடந்த மக்களவைத் தேர்தலை காட்டிலும், தமிழகத்தில் கூடுதல் இடங்களை திமுகவிடம் கேட்போம் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசின் தவறான பொருளாதார நடவடிக்கையால், திருப்பூர் பெருமளவு பாதித்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது 12.5 சதவீதம் வங்கதேச துணிக்கு வரி விதிக்கப்பட்டது. ஆனால், மோடி அரசு உள் நாட்டு விஷயங்களை அறியாமல் வங்க தேசத்துக்கு வரி விலக்கு அளித்ததால், ஜவுளித் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு முன்பே கோயில்களின் நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. தமிழகத்தின் வரலாறு தெரியாமல் நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார். கோயில்கள் அரசின் கையில் இருப்பதுதான் பாதுகாப்பானது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் ரூ.5 ஆயிரம் கோடி சொத்துகளை இந்து சமய அறநிலையத் துறை மீட்டுள்ளதை பாஜக வரவேற்க வேண்டும். சட்டப்பேரவை மூலமாக தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுமா, உச்ச நீதிமன்றம் சென்று தான் நிறைவேற்ற வேண்டுமா என்பதை ஆளுநரிடம் கேட்கிறோம்.
திருவண்ணாமலை விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் திரும்பப்பெறப்பட்டது. காவிரியை வைத்து கர்நாடகா பாஜக - தமிழக பாஜக அரசியல் செய்கின்றன. கடந்த தேர்தலை காட்டிலும் வரும் மக்களவைத் தேர்தலில், கூடுதல் இடங்களை திமுகவிடம் கேட்போம். உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு நடிகர், நடிகைகளை அழைத்தவர்கள், நாட்டுக்காக விளையாடி உலகக் கோப்பை வென்றவர்களை முறையாக அழைக்கவில்லை. வல்லப பாய் படேல் பெயரில் இருந்த ஸ்டேடியத்தை புனரமைத்து மோடி பெயரில் மாற்றப்பட்டது.
இது நில அபகரிப்பு போல் ஸ்டேடியம் அபகரிப்பாக உள்ளது. ஆளுநர் வேண்டாம் என்றோ, அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்பதோ காங்கிரஸ் கருத்தல்ல. மரபை மீறக் கூடாது என்று தான் சொல்கிறோம். இழுக்கு ஆர்.என்.ரவிக்கு அல்ல, தமிழ்நாடு ஆளுநர் பதவிக்கு தான். காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது இல்லை. இது ஜனநாயக கட்சி. இவ்வாறு அவர் கூறினார். திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன், மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் ராமசாமி, ஈஸ்வரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.