தமிழகம்

ஈரோட்டில் 3-வது நாளாக கனமழை: கோபி அருகே வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பு

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 3-வது நாளாக பெய்த கனமழையால் கோபியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, சத்தியமங்கலம், கொடுமுடி, அந்தியூர், கோபி உள்ளிட்ட இடங்களில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், 3-வது நாளாக நேற்று முன் தினம் இரவும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கோபி, கூகலூர், தாழைக்கொம்பு புதூர், சுமைதாங்கி, குளத்துக்கடை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

தாழைக்கொம்பு புதூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நள்ளிரவில் மழைநீர் புகுந்தது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் மேடான பகுதிக்கு சென்றனர். பல்வேறு இடங்களில் குடியிருப்புகளைச் சுற்றி மழை வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதால், பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழைநீர் பள்ளத்துக்கு செல்ல முடியாதபடி, அப்பகுதியில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த பொதுமக்கள், அதன் காரணமாகவே வீடுகளில் வெள்ளம் புகுந்ததாகத் தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபி வட்டாட்சியர் உத்திரசாமி மற்றும் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை மீட்டனர்.

மழை வெள்ள நீரை அகற்றவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். கோபி அருகே உள்ள அரசூர் தட்டான் புதூர் தரைப்பாலம், மழை வெள்ளத்தால் மூழ்கியதால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பலத்த மழை எதிரொலியாக கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையின் இரு புறங்களிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. கொடிவேரி அணையில் இருந்து 1,600 கனஅடி நீர் வெளியேறுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மாவட்டத்தில் அதிகளவாக கவுந்தப்பாடியில் 152 மிமீ மழை பதிவாகியுள்ளது.

மாவட்ட மழையளவு விவரம் (மிமீ): கவுந்தப்பாடி 152, எலந்தைக்குட்டை மேடு 101, கோபி 80, கொடிவேரி 62, பவானி, பவானிசாகர் 40, சத்திய மங்கலம் 34, நம்பியூர் 28, பெருந்துறை 20, ஈரோடு 7.40 என மழை பதிவானது.

SCROLL FOR NEXT