தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கயத்தாறு அருகே கண்மாய் உடைந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது. நேற்று காலை வரை மழை நீடித்தது. இதனால் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று பகலில் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசான வெயில் தலைகாட்டியது.
மழை நீர் சூழ்ந்தது: பலத்த மழை காரணமாக தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளான லூர்தம்மாள்புரம், ஸ்டேட் வங்கி காலனி, கலைஞர் நகர், பால்பாண்டி நகர், ராஜீவ் நகர், திருவிக நகர், இந்திரா நகர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வீடுகளைச் சூழ்ந்தது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.
நகர சாலைகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் மழை நீரை உடனுக்குடன் வெளி யேற்றினர். இப்பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ரயில் நிலையம்: தூத்துக்குடி கீழுர் ரெயில் நிலையத்தில் மழைநீர் தேங்கி தண்டவாளம் மூழ்கியது. சிக்னல் சரிவர கிடைக்காததால் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் 2-ம் கேட் அருகே நிறுத்தப்பட்டது. பயணிகள் அங்கு இறங்கி, அருகில் இருந்த தடுப்புச் சுவரை தாண்டி குதித்து வீடுகளுக்கு சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால், 57 விசைப்படகுகள் மட்டும் கடலுக்குச் சென்றன. பெரும்பாலான விசைப்படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மழை விவரம்: மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 103 மில்லி மீட்டர் மழை பதிவானது. திருச்செந்தூர் 88, கழுகுமலை 87, விளாத்திகுளம் 83, குலசேகரன் பட்டினம் 63, கோவில்பட்டி 53.50, ஓட்டப்பிடாரம் 52, கடம்பூர் 47, எட்டயபுரம் 43.20, வைப்பார் 39, கீழஅரசடி 35, கயத்தாறு 31, தூத்துக்குடி 30.30, காடல்குடி 28, சூரங்குடி 21, ஸ்ரீவைகுண்டம் 18, சாத்தான்குளம் 14, வேடநத்தம் 10 மிமீ மழை பெய்துள்ளது.
கண்மாய் உடைந்தது: கயத்தாறு வட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை பெய்தது. உசிலங்குளம் கிராம கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால், கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த பகுதியில் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு ஆகியவை தண்ணீரில் மூழ்கின.
உடைப்புகளை சரி செய்யும் பணியில் விவசாயிகள் மற்றும் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர். இதேபோல் பெரியசாமி புரத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிர்கள் மழைநீரில் மூழ்கின.