மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரும் வழக்கில், தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் தரைமட்டமாகி விபத்துக்குள்ளானதில், 61 பேர் உயிரிழந்தனர்; 21 பேர் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஒரு பொது நலன் மனுவை தாக்கல் செய்தார்.
அதில், 'நீதிபதி ரகுபதி ஏற்கெனவே 3 பொறுப்புகளை கவனித்து வருகிறார். இவருக்கு மேலும் பொறுப்பு கொடுப்பது தவறானது. இதை ரத்து செய்ய வேண்டும்.
அத்துடன், 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் பலியாகியுள்ளனர். இதில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இல்லையெனில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சிறப்புப் புலனாய்வுக் குழு தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.
இந்த விவகாரத்தை தமிழக போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, 11 மாடி கட்டிட விபத்து குறித்த விசாரணை கமிஷன் தலைவராக நீதிபதி நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும்' என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மவுலிவாக்கம் கட்டிட விபத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரும் மனு தொடர்பாக, இம்மாதம் 23-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர், சிபிஐ, காஞ்சிபுரம் ஆட்சியர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.