கனமழை காரணமாக அரசுப் பேருந்து மீது முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் 
தமிழகம்

நீலகிரி கீழ் கோத்தகிரியில் 241 மில்லி மீட்டர் மழை பதிவு: மரங்கள் முறிந்து விழுந்து மலை ரயில் சேவை ரத்து 

ஆர்.டி.சிவசங்கர்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. கீழ் கோத்தகிரியில் 241 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்துள்ளதால் வருகிற 25-ம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடரும் கனமழை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக அடுத்தடுத்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 9-ம் தேதி நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

மலை ரயில் சேவை ரத்து: இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர்-உதகை இடையேயான மலை ரயில்பாதை தண்டவாளத்தில் பல்வேறு இடங்களில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் ரயில்வே பாதைக்கு கீழ் உள்ள நிலப்பரப்பு முழுவதும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் புனரமைப்பு பணிகள் தாமதமாகி வந்தது.

சுமார் ஒரு வார காலத்துக்கும் மேலாக ரயில்வே பணியாளர்கள் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு கடந்த 18-ம் தேதி வரை தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 19-ம் தேதி மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்: இதனிடைய புதன்கிழமை இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக மீண்டும் தண்டவாளத்தின் பல்வேறு இடங்களிலும் மரங்கள் மற்றும் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன.இதனால் வருகிற 25-ம் தேதி வரை மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது. இருப்பினும் மலை ரயிலில் பயணிக்க முடியாததால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு: இந்நிலையில் நீலகிரியில் கன மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் அருணா.
இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியாறு பகுதியில் அரசு பேருந்து மீது மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதே போல கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சபனை பகுதியில் சாலை குறித்து மரங்கள் இருந்ததால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

241 மில்லி மீட்டர் மழை பதிவு: மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி கீழ் கோத்தகிரியில் 241 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.உதகையில் 7, கிளன்மார்கன் 20, குந்தா 28, அவலாஞ்சி 12, எமரால்டு 20, மெத்தை 48, கிண்ணக்கொரை 55, அப்பர் பவானி 9, குன்னூர் 52, பர்லியாறு 98, கோத்தகிரி 81, கோடநாடு 36, கூடலூர் 55, தேவாலா 46, செருமுள்ளி 48, பாடந்துரை 35, ஓவேலி 51, பந்தலூர் 35 மி.மீ., மழை பதிவானது.

SCROLL FOR NEXT