வத்திராயிருப்பு: கனமழை காரணமாக சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பவுர்ணமி நாளன்றுசுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வழிபாட்டுக்குச் செல்வதற்காக பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத் துறையினர் அறிவித்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு, கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமிவழிபாட்டுக்காக வரும் 24-ம்தேதி முதல்27-ம் தேதி வரைபக்தர்கள் மலை ஏறிச்சென்று, தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 119 மி.மீ. அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, வழுக்குப்பாறை, மலட்டாறு ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கார்த்திகை மாத பவுர்ணமியன்று, சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வழிபாட்டுக்காக பக்தர்கள் செல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத் துறையினர் அறிவித்துள்ளனர்.