மதுரை: மதுரையில் வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்ற அதிகாரிகளை ஆக்கிரமிப் பாளர்கள் விரட்டியடித்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை பாதியிலேயே கைவிடப்பட்டது. விரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீஸில் புகார் செய்ய மாநகராட்சி ஆணையர் உத்தர விட்டுள்ளார்.
மதுரை மாநகரின் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வைகையின் வடகரை, தென்கரை மக்கள் தடையின்றி நகரின் 2 பகுதிகளுக்கும் வந்து செல்லும் வகையில் ஆற்றின் இரு கரைகளிலும் ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலை அமைக்கப்பட்டது. இதில், நகருக்கு வெளியே புறநகரில் நெடுஞ்சாலைத் துறை அமைத்த சாலை சிறப்பாகவும், தரமாகவும் முழுமையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி சார்பில் அமைத்த சாலை தரமற்றதாக இருப்பதோடு அது முழுமையாகவும் அமைக்கப்படவில்லை.
இதனால், இந்தச் சாலையை வாகன ஓட்டுநர்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் நகர் பகுதியில் போக்கு வரத்து நெரிசல் எந்த வகையிலும் குறையவில்லை. இந்நிலையில், நகர் பகுதியில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் முழுமையாக அமைக்கப்படாத இந்தச் சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்ததால் தனியார் ஆக்கிரமிப்புகள் அதி கரித்தன. கார், ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் என தனியார் வாகனங்கள் நிறுத்து மிடமாக மாறியதோடு சாலையோரங்களில் கடை வைத்திருப்போர் தங்கள் பொருட்களை இந்தச் சாலையில் பரப்பி வியாபாரம் செய்கின்றனர்.
மீன் கடைகள் ஆக்கிரமிப்பும் அதிகரித்தன. மாட்டுத் தொழு வங்கள் சாலையில் இருந்தன. இதனால், ஸ்மார்ட் சிட்டி சாலை சுமாரான சாலையாகக் கூட இல்லை. அதுவும் இரவு நேரங்களில் மின் விளக்கு வசதியும் இந்தச் சாலையில் பல இடங்களில் இல்லை. இரவு நேரங்களில் வழிப்பறியில் சிக்கிவிடுவோமோ என்ற அச்சத்தில் மக்கள் இந்தச் சாலையில் செல்லவே தயங்குகினறனர். இந்நிலையில், நேற்று இந்தச் சாலையின் தென்கரையில் ஓபுளாப் படித்துறை சந்திப்பு முதல் குருவிக்காரன் சாலை சந்திப்பு வரை இருந்த தனியார் ஆக்கிரமிப்புகளை போலீஸாருடன் நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் அகற்றச் சென்றனர்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த 25 கடைகளின் பழைய மரக் கட்டைகள், கதவு, ஜன்னல்கள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் 8 டிராக்டர்கள் கொண்டு மாநகராட்சிப் பணி யாளர்கள் மூலம் அகற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன. கடைகளின் முன்புறம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள படிகள், சிமென்ட் சிலாப்புகள், மேற்கூரைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதற்கு அப்பகுதி ஆக்கிரமிப்பாளர்கள், மாநகராட்சி நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது சிலர், நகரமைப்புப் பிரிவு செயற்பொறியாளர் (திட்டம்) மாலதியை தகாத வார்த்தையால் திட்டினர். பாதுகாப்புக்கு 3 போலீஸார் மட்டுமே சென்றதால் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் தடுத்தனர். அதனால், அதற்கு மேல் மாநகராட்சி அதிகாரிகளால் ஆக்கிரமிப்பாளர் களை மீறி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை. மாநகராட்சி கேட்டுக் கொண்டும் கூடுதல் போலீஸாரை மாநகர் காவல்துறை அனுப்பி வைக்காததால் ஆக்கிரமிப்பாளர்கள், மாநகராட்சி நகரமைப்பு அதி காரிகளை விரட்டி அடித்தனர்.
ஆக்கிரமிப்பாளர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதால் அதிருப்தியடைந்த நகரமைப்பு அதிகாரி மாலதி மாநகராட்சி ஆணையர் லி.மது பாலனிடம் புகார் செய்தார். அவர், அப்பகுதி மண்டல உதவி ஆணையர் மூலம், தகாத வார்த்தையால் பேசிய ஆக்கிரமிப் பாளர்கள் மீது போலீஸில் புகார் செய்ய உத்தரவிட்டார்.
மேலும், அடுத்தடுத்த நாட்களில் கூடுதல் போலீஸார், வருவாய்த் துறை அதிகாரிகளுடன் வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி சாலையில் நீடிக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் உத்தரவிட்டார். இந்த ஸ்மார்ட் சிட்டி சாலையை முழுமையாக அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பட்சத்தில் மாநகரின் 50 சதவீத போக்குவரத்தைக் குறைக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.