புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்க்ஷாக்களுக்கு மீட்டர் பொருத்துவதில்லை மற்றும் வரையறுக்கப்பட்ட கட்டணத்தை அதிகமாக பயணிகளிடம் வற்புறுத்திக் கட்டணம் பெறுவதாகவும் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து புதுச்சேரி போக்குவரத்துத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டங்களிலும் ஆட்டோ கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை நமது துறையின் முன் வைக்கின்றனர். எனவே, மீட்டர்கள் பொருத்தாத ஆட்டோக்கள் மற்றும் வரை யறுக்கப்பட்ட கட்டணத்துக்கு அதிகமாக வசூலிக்கும் ஆட்டோ உரிமை தாரர்கள் மீது தொடர்புடைய சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க புதுச்சேரி போக்குவரதத்துத் துறை முடிவு செய்துள்ளது.
ஆகையால், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் அனைத்து ஆட்டோ ரிக்ஷாக்களிலும் மீட்டர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை புதுச்சேரி அரசின் போக்குவரத்துத் துறை கண்டிப்பாக அறிவுறுத்துகிறது. மீட்டர் பொருத்தப்படாத ஆட்டோ ரிக்க்ஷாக்கள் மற்றும் மீட்டர்களின் அடிப்படையில் ஆட்டோ கட்டணம் வசூலிக்காத மற்றும் இசைவாணை நிபந்தனைகளை மீறும் ஆட்டோக்களின் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் போக்குவரத்து துறையானது ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து 8.12.2016 அன்று அரசாணை வெளியிட்டது.
அதன்படி, முதல் 1.8 கி.மீக்கு குறைந்த பட்சம் ரூ.35- ம் ஒவ்வொரு கூடுதல் கி.மீக்கு ரூ.18- ம் காத்திருப்பு கட்டணமாக ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ரூ.5-ம்நிர்ணயம் செய்தது. ஆட்டோ கட்டண அட்டவணை போக்குவரத்து துறையின் இணையதளத்தில் ‘https://transport.py.gov.in’ தரப்பட்டுள்ளது. ஆட்டோ ரிக்ஷாக்களில் பயணம் செய்பவர்கள், பயணிகள் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது 1031-க்கு அழைக்கலாம். மேலும் அவர்கள் போக்குவரத்து துறையின் மின்னஞ்சல் ஐடி-க்கும் அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் - போக்குவரத்து துறையால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டண விகிதம் வருமாறு: 1.8 கி.மீ - ரூ.35, 2 கி.மீ - ரூ.38.60, 2.5 கி.மீ - ரூ.47.60, 3 கி.மீ - ரூ.56.60, 3.5 கி.மீ - ரூ.65.60, 4 கி.மீ - ரூ. 74.60, 4.5 கி.மீ -ரூ. 83.60, 5 கி.மீ - ரூ.92.60, 5.5 கி.மீ- ரூ.101.60, 6 கி.மீ- ரூ.110.60, 6.5 கி.மீ - ரூ.119.60, 7 கி.மீ - ரூ.128.60, 7.5 கி.மீ - ரூ.137.60, 8 கி.மீ - ரூ.146.60, 8.5 கி.மீ - ரூ.155.60, 9 கி.மீ - ரூ.164.60, 9.5 கி.மீ - ரூ.173.60, 10 கி.மீ - ரூ.182.60.