திருவண்ணாமலை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் 883 உயர்மட்ட பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் பூண்டி - பழங்கோயில், கீழ்பொத்தரை - பூவாம்பட்டு, கீழ்த் தாமரைப்பாக்கம் - தென் மகாதேவமங்கலம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ.55.88 கோடியில் 3 உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை பூண்டி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் முன்னிலை வகித்தார். பணியை தொடங்கி வைத்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசும் போது, “ரூ.55.88 கோடியில் தொடங்கப் பட்டுள்ள 3 உயர்மட்ட பாலங்களையும் அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் விரைவாக கட்டிக் கொடுக்க வேண்டும். 3 உயர்மட்ட பாலங்களால் 27 ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். செய்யாற்றில் தண்ணீர் வந்தால், பொதுமக்கள் அடுத்த இடத்துக்கு செல்ல முடியாது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில், திருவண்ணாமலை மாவட்டத்தில் எண்ணற்ற பாலங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1,281 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலமாக 5 ஆண்டுகளில் தரம் உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக 863 உயர்மட்ட பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2023 - 24 நிதியாண்டில் 277 பாலங்கள் கட்டப்படுகின்றன. அடுத்த நிதியாண்டில் 141 உயர்மட்ட பாலங்கள் கட்டி முடிக்கப்படும். நபார்டு திட்டத்தின் கீழ் பாலங்கள் கட்டும் பணிக்கு ரூ.1,240 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கலசப்பாக்கம் வட்டத்தில் 3 உயர்மட்ட பாலங்கள் கட்ட ரூ.55.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் போக்குவரத்து அதிகம் உள்ள கிராம சாலைகளை, நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை - திருக்கோவிலூர், திருவண்ணாமலை - செங்கம், எட்டிவாடி - ஆரணி வரை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெறுகின்றன. மேலும், ஆற்காட்டில் இருந்து வந்தவாசி வழியாக திண்டிவனம் வரை, சாலையின் தரத்தை உயர்த்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ‘நம்ம சாலை செயலி’ எனும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகள் குறித்து புகார் தெரிவிக்க, இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பழுதடைந்துள்ள சாலைகளின் புகைப் படங்களை செயலியில் பதிவேற்றம் செய்து புகார் தெரிவிக்கலாம். இப்புகார் பெறப்பட்டதும், நெடுஞ்சாலையாக இருந்தால் 24 மணி நேரத்திலும், மாவட்ட சாலையாக இருந்தால் 72 மணி நேரத்திலும் சீரமைக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களும் திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்படும்” என்றார்.
இதில், ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி, கண்காணிப்பு பொறியாளர் தேவராஜ், தலைமை பொறியாளர் முருகேசன், திமுக மருத்துவரணி மாநில துணைத் தலைவர் கம்பன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், ஒன்றிய குழு தலைவர்கள் சுந்தர பாண்டியன், அன்பரசி ராஜசேகரன், கலைவாணி கலைமணி, பரிமளா கலையஅரசன், ஒன்றிய திமுக செயலாளர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார், ஆறுமுகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.