கோப்புப்படம் 
தமிழகம்

தலை குனிந்து செல்லும் வாகன ஓட்டிகள்: காலத்துக்கேற்ப மேம்படுத்தப்படுமா பெரம்பூர் சுரங்கப்பாதை?

செ.ஆனந்த விநாயகம்

சென்னை: வடசென்னையின் பெரிய தொகுதி மற்றும் முக்கிய பகுதியாக பெரம்பூர் விளங்குகிறது. இங்கு ரயில் நிலையம், பேருந்து நிலையம் என போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மற்றொருபுறம் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப்பாதை சீரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி மக்கள் முன்வைக்கின்றனர். குறிப்பாக பெரம்பூர் பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் இருந்து சில மீட்டர்கள் தொலைவில் இருக்கும் இந்த சுரங்கப்பாதை, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு மிகவும் பயனுடையதாக இருந்து வருகிறது.

இதன்மூலம் பெரம்பூரில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் வழியாக ஸ்டீபன்சன் சாலையை அடைய முடியும். அதன் மூலம் வியாசர்பாடி, எம்கேபி நகர் போன்ற பகுதிகளுக்குச் செல்ல முடியும். இந்த சுரங்கப்பாதையைக் கடக்க வேண்டுமானால் தலைகுனிந்தபடியே செல்ல வேண்டியிருப்பதால், இதனை சீரமைத்தால் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக பெரம்பூர் சுற்றுவட்டார மேம்பாட்டுக் குழுவின் அமைப்பாளர் ரகுகுமார் சூடாமணி கூறியதாவது: இந்தசுரங்கப்பாதையை இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவு பயன்படுத்திவருகின்றனர்.

அலுவலக நேரங்கள் மட்டுமின்றி எப்போதும் இருசக்கர வாகனங்கள் சென்று வருவதால் இப்பகுதி பரபரப்பாகவே காணப்படும். ஆனால் அவர்கள் தலையை குனிந்தபடி மிகுந்த நெருக்கடிக்கு இடையிலேயே பயணிக்க வேண்டியிருக்கிறது. அதுவும் மழைக்காலங்களில் நீர் தேங்கி மோசமான நிலையில் சுரங்கப்பாதை காணப்படுகிறது. எனவே, இந்த சுரங்கப்பாதையை விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, "பெரம்பூர் பகுதியில் சில மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை முடிவடைந்த பிறகு, சுரங்கப்பாதை சீரமைப்பு தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" என்றனர்.

SCROLL FOR NEXT