சென்னை: வரும் டிச.3-ம் தேதிக்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமை வகித்து முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது: உலக மீனவர் தினம் கொண்டாடப்படும் நிலையில், மீனவர்கள் நலனுக்காக திமுக ஆட்சியில் ஒரு மீன்பிடித் துறைமுகம் கூட உருவாக்கப்படவில்லை. கடத்தப்பட்ட மீனவர்களை காப்பாற்றுவதற்கு கூட கடிதம் மட்டுமே எழுதப்படுகிறது.
சட்டஒழுங்கு, விலைவாசி, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், அதிமுகவின் திட்டங்களை நிறுத்தியிருப்பது குறித்து பரப்புரை செய்வோம். மத்தியிலோ மாநிலத்திலோ ஆளும் அரசு மக்கள் விரோத போக்கை கடைப்பிடிக்கும்போது, அதனை மக்களிடம் எடுத்துச் செல்வோம். பாஜகவுடன் கூட்டணியில்லை என பொதுச்செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சியினர் விலகும் நிலை வரும். அதிமுகவினர் குறித்து சட்டப்பேரவைத் தலைவர் பேசியிருப்பது அவரது அமைச்சர் பதவிக்கான ஆசையைக் காட்டுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை, சி.வி.சண்முகம், சி.பொன்னையன், செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக இக்கூட்டம் குறித்து கட்சியினர் கூறியதாவது: பூத் கமிட்டி அமைக்கும் பணியை சரியாக செய்யாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டிச.3-ம் தேதிக்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க வேண்டும். மாவட்டங்களில் கட்சி பொறுப்புகளில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வரும் மக்களவைத் தேர்தலையொட்டி, டிசம்பரில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே சென்னை பழனிசாமி இல்லத்துக்கு சென்ற தமிழக பாஜக ஓபிசி அணி துணைத் தலைவர் ஆற்றல் அசோக்குமார் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இவர், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதியின் மருமகனும், முன்னாள் எம்.பி. சவுந்தரத்தின் மகனுமாவார். தொடர்ந்து, அதிமுக மருத்துவ அணிக்கான இணையதளத்தை பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர், அதிமுக தலைமையகத்தில் வழக்கறிஞர் ஏ.பிரான்சிஸ் ஹோலி ராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.