கோ
வையை மையமாகக் கொண்ட சிறுவாணி வாசகர் மையத்தை நடத்தி வருகிறார் ஜி.ஆர்.பிரகாஷ். கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். 20 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியம் சார்ந்த வாசிப்பில் மனதைப் பறிகொடுத்த இவர், 2015-ல் நண்பர்கள் உதவியுடன் பவித்ரா பதிப்பகத்தைத் தொடங்கியுள்ளார்.
நல்ல நூல்களை வாசகர்களின் வீடுகளுக்கே அனுப்பும் முயற்சியைத் தொடங்கியது குறித்து ஜி.ஆர்.பிரகாஷ் கூறியதாவது: வீடுகளுக்கு புத்தகங்களை அனுப்பும் ஆலோசனை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வழங்கியது. அதன் விளைவுதான் ‘சிறுவாணி வாசகர் மையம்’. உறுப்பினராகச் சேர ஆண்டு சந்தா ரூ.1,200 செலுத்தினால் ரூ.1,600 மதிப்பிலான 12 நூல்களை மாதத்துக்கு ஒன்றாக அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கிறோம்.
இந்த வாசிப்பு இயக்கம் தொடர் இயக்கமாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தமிழில் நல்ல நூல்களை வெளியிட்டு, புத்தக வாசிப்பால் மனித மனங்களைப் பண்படுத்தும் எங்கள் முயற்சி தொடரும் என்கிறார் ஜி.ஆர்.பிரகாஷ். (தொடர்புக்கான மின்னஞ்சல்: Siruvanivasagar@gmail.com)