சென்னை: மாமல்லபுரத்தில் 2013 ஏப்.25-ல் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சித்திரை முழுநிலவு திருவிழாவில் பங்கேற்க வந்தவர்களுக்கும், மற்றொரு பிரிவினருக்கும் மரக்காணம் அருகே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். அதையடுத்து சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாமகவினர் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டதால் அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த மாவட்டங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மதுபானக்கடைகள் தீ வைக்கப்பட்டதால் மூடப்பட்டன. இதனால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டும் விதமாக,
இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பாமக முன்னாள் தலைவர் ஜி.கே.மணிக்கு 2013-ல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.கே.மணி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது என கூறி, அவரிடம் 4 மாதங்களில் விசாரணை நடத்தி தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்ததுல் சட்டத்தின்கீழ் இழப்பீட்டை வசூலிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2021-ல் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஜி.கே.மணி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தி்ல் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜி.கே.மணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் ஆஜராகி, ‘‘மதுபானக்கடைகள் மூடப்பட்டதையும், அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததையும் பொதுச் சொத்துக்கு ஏற்பட்ட சேதமாக கருதி, அதிகார வரம்பு இல்லாமல் இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். பொதுச் சொத்து சேத தடுப்புச் சட்டத்தின்படி குற்றம் இருந்தால் மட்டுமே இழப்பீடு கோர முடியும்’’ என வாதிட்டனர்.
15 நாட்களுக்குள் பதில்: அதையடுத்து நீதிபதிகள், ‘‘பொதுவாக இதுபோல விளக்கம் கோர பிறப்பிக்கப்படும் நோட்டீஸ்களில் நீதிமன்றம் தலையிடுவதில்லை. எனவே மனுதாரர் 15 நாட்களுக்குள் தனது கூடுதல் பதிலை அரசுக்கு அளிக்க வேண்டும். வருவாய் இழப்பை பொதுச் சொத்துக்கு ஏற்பட்ட சேதமாக கருத முடியுமா என்பதையும் அரசு அதிகாரிகள் சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.