திருநெல்வேலி: தென் மாவட்ட சாதிய கொலை களை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக அணுகினால் தீர்வு கிடைக்காது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பல மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது. இத்தகைய சம்பவங்களுக்கு துணை போகும் வகையில் காவல் துறையின் செயல்பாடு உள்ளது. கடந்த 1990 - 2000ம் ஆண்டுகளில் இரு தரப்பு மோதல்கள் இருந்தன. ஆனால் தற்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தென் மாவட்ட கிராமங்களில் மற்ற சமூகத்தினரை அச்சுறுத்தும் வகையில் வன்முறை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.
இந்த பிரச்சினையின் பின்னணி குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மனித உரிமை ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மத்திய நுண்ணறிவு பிரிவு, தேசிய புலனாய்வு பிரிவு போன்ற அமைப்புகள் ஒருங்கிணைந்து விசாரணை நடத்தி இதன் பின்னணியை கண்டறிய வேண்டும். இது போன்ற தொடர் வன்முறை சம்பவங்களில் காவல்துறையினர், அரசியல் வாதிகள், சமூக விரோதிகள் மற்றும் தரகர்களின் கூட்டு சதி உள்ளது.
எனவே இவற்றை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் அணுகினால் தீர்வு காண முடியாது. சாதாரண மக்களை அச்சத்திலேயே வைத்திருக்கும் சூழல் முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானது. திமுக ஆட்சி காலத்தில் சாதி ரீதியிலான தாக்குதல்கள் அதிகரிக்கும். இப்போது அது ஜெட்வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்திருக்கிறது.
சாதியை வைத்து தென் மாவட்டங்களில் கொலைகள் நடைபெறுகின்றன. நாங்குநேரியில் பள்ளி மாணவரும், அவரது சகோதரியும் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் கடைமீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதில் 12-ம் வகுப்பு மாணவர் ஈடுபட்டுள்ளார். பள்ளி மாணவர்களிடையே சாதி பிரிவினைகள் வளர்ந்து வருகிறது. இதன் தீவிர தன்மையை தமிழக அரசு உணர்ந்ததாக தெரியவில்லை என்று தெரிவித்தார்.