சென்னை: பதவி இறக்கம் செய்ய கூடாது என வலியுறுத்தி சென்னையில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. மாநில தலைவர் போ.அன்பரசன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் மு.மாரிமுத்து, பொருளாளர் மா.இளங்கோ, மாநில அமைப்பு செயலாளர் வி.ச.நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மழை பெய்த நிலையிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசன் கூறியதாவது: பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள், முன்னுரிமை அடிப்படையில் பணிமாறுதல் மூலம் நியமனம் பெற்று உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இந்த பதவி உயர்வை எதிர்த்து ஒருசில ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியது தவறு என்று உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 23-ம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தும் பலன் கிடைக்கவில்லை. பள்ளிக்கல்வித் துறை இயக்குநரிடம் மனு கொடுத்தும் சரியான பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 2018 ஜன.1 முதல் பதவி உயர்வுபெற்ற உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சுமார் 1,300 பேரை மீண்டும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி இறக்கம் செய்ய பள்ளிக்கல்வித் துறை முயற்சி எடுத்து வருகிறது. இது தலைமை ஆசிரியர்களிடம் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசும், பள்ளிக்கல்வித் துறையும் உயர் நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்று, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இதில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, தலைமை ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்வது இல்லை என கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.