காஞ்சிபுரம்: கோயில் மற்றும் பட்டுச்சேலைகளின் வர்த்தக நகரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாநகராட்சியில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் போக்குவரத்துக்காக மாநகர பேருந்து அல்லது மினி பேருந்து சேவையை தொடங்க, போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கோயில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாநகரில் உலக பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயில், காமாட்சியம்மன், சித்ரகுப்தர் மற்றும் பஞ்சபூத ஸ்தலங்களில், மண்ணுக்கான ஸ்தலமாக விளங்கும் ஏகாம்பரநாதர் கோயில்கள் உட்பட ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளன.
இக்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அதேபோல், உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டுப்புடவை வாங்குவதற்காகவும், நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கார், வேன் உட்பட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனால், நகரின் முக்கிய சாலைகளான காந்தி சாலை, காமராஜர் சாலை, விளக்கடி கோயில் மற்றும் நான்கு ராஜ வீதிகளில் தொடர்ந்து வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நெரிசலை தடுப்பதற்காக, கோயில்களுக்கு சுற்றுலாவாக வரும் வாகனங்கள் நகரின் நுழைவு பகுதியான ஒலிமுகம்மது பேட்டை அருகே அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படுகின்றன.
நெரிசல் குறையவில்லை: மேலும், அங்கிருந்து ஆட்டோக்கள் மூலம் கோயில்களுக்கு செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், வருவாய் போட்டியில் ஏராளமான ஆட்டோக்கள் மேற்கண்ட வாகன நிறுத்துமிடத்தில் இருந்து நகருக்குள் இயக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. இது ஒருபுறமிருக்க, காஞ்சிபுரம் மாநகரை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக, நகருக்கு வந்து செல்கின்றனர். மேலும், பிரதான சாலையான காமராஜர் சாலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகளவில் இயங்கி வருவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடக்கும்போது ஆட்டோக்களால் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
கிராமப்புற மாணவர்கள் நகரப் பகுதியில் செயல்படும் பள்ளிக்கு வருவதற்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால், குறைந்தபட்சம் ரூ.20 வழங்கி ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் உள்ளூர் மக்களும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல ஆட்டோக்களை பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலையும் ஏழை எளிய மக்களின் போக்குவரத்து செலவையும் குறைக்கும் வகையில் மாநகர பேருந்துகள் அல்லது மினி பேருந்துகள் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஸ்ரீதர் கூறியதாவது: காஞ்சிபுரம் நகருக்கு அருகேயுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் வேலை உட்பட பல்வேறு தேவைகளுக்காக இங்கு வந்த செல்ல மாதம் ரூ.3 ஆயிரம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இன்றைய பொருளாதார சூழ்நிலையில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இந்த தொகை மிகவும் பெரியது. வர்த்தக நகரம் மற்றும் கோயில் நகரம்என்றபோதிலும், குறைந்தபட்சம் மாநகர பேருந்து சேவை கூட இல்லாதது மிகவும் வேதனை அளிக்கிறது.
நகரில் 2 கி.மீ., தொலைவு இடைவெளியில் உள்ள கோயில்களுக்கு ஆட்டோக்களில் செல்ல குறைந்தபட்சம் ரூ.100 வசூலிக்கப்படுகிறது. ஷேர் ஆட்டோக்களில் ஒரு நபருக்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது. ஒரேயொரு தனியார் பேருந்து மட்டும் நகர பேருந்தாக இயங்கி வருகிறது. இதுவும் கோயில்களின் அருகே இயக்கப்படுவதில்லை. அதனால், ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் வசதிக்காக நகரில், மாநகர பேருந்து அல்லது மினி பேருந்து சேவையை தொடங்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, கேட்டபோது போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: காஞ்சிபுரம் நகரப் பகுதிகளில் உள்ள சாலைகள் குறுகிய சாலையாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவே காணப்படுகிறது. இதனால், நகரப் பேருந்து உட்பட புதிய பேருந்து சேவைகளை தொடங்க முடியாத நிலை உள்ளது. இருப்பினும், இதுதொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.