தமிழகம்

போதை காளான் வழக்கில் கைதானவருக்கு மதுரை ஐகோர்ட் கிளை ஜாமீன் மறுப்பு

கி.மகாராஜன்

மதுரை: போதை காளான் வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திண்டுக்கல் கொடைக்கானலை சேர்ந்த ஆனந்தகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'கொடைக்கானல் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் போதை காளான் விற்றதாக கடந்த பிப்ரவரி மாதம் என்னை போலீஸார் கைது செய்தனர். இது பொய் வழக்கு. காளான் விற்பனைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ''மனுதாரர் கொடைக்கானல் பகுதியில் விளையும் போதை காளான் விற்பனை செய்துள்ளார். இதற்கு ஆதாரங்கள் உள்ளன. மனுதாரரை ஜாமீனில் விட்டால் விசாரணை பாதிக்கும்'' என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ''மனுதாரர் மேஜிக் மஸ்ரூம் என்ற நூறு கிராம் போதை காளான் வைத்திருந்துள்ளார். இது வணிக அளவிற்குள் வருகிறது. மனுதாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT