புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உரிய நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவருக்கு பக்கவாதம் கூட ஏற்படலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி வாதிட்டார்.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்ததையடுத்து, அவருக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பீலா எம்.திரிவேதி தலைமையிலான அமர்வில் நேற்று நடந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, ‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் பிரச்சினை உள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஜாமீன் கிடைக்காததால் அவர் 159 நாட்களாக புழல் சிறைக்குள் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை மற்றும் மருத்துவ காரணங்களைக் கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீனாவது வழங்க வேண்டும். அவருக்குள்ள இதய குழாய் அடைப்புக்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் அது அவருடைய உயிருக்கே ஆபத்தாகிவிடும். குறிப்பாக உரிய நேரத்தில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பக்கவாதம் கூட ஏற்படலாம்’ என்று வாதிட்டு, செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இந்த அறிக்கையில் எங்குமே, செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் அனுமதித்துதான் சிகிச்சை அளிக்க வேண்டுமென கூறப்படவில்லை’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.28-க்கு தள்ளிவைத்தனர்.
மருத்துவ அறிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணையத்தில் கொழுப்பு கட்டி உள்ளது. மன அழுத்தம், கால் வலி போன்ற உபாதைகளும் உள்ளன. அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை மருத்துவர்கள் வெளியிடுவார்கள்” என்றார்.