தமிழகம்

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 62.24 அடியாக உயர்வு

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 62.24 அடியாக உயர்ந்துள்ளது. வட கிழக்குப் பருவமழை காரணமாக, காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்கிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 3,193 கனஅடிவீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது.

இந்நிலையில், பரவலாக மழை பெய்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று அதிகரித்து, மேட்டூர்அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 4,015 கனஅடியாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், மேட்டூர் அணையில் இருந்து, காவிரிக் கரையோரங்களில் உள்ள மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கனஅடி வீதம் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கான நீர்வரத்தைக் காட்டிலும், நீர் வெளியேற்றம் குறைவாக இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 61.83 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 62.24 அடியாக உயர்ந்தது. அதேபோல, 26.07 டிஎம்சி-யாக இருந்த அணையின் நீர் இருப்பு 26.38 டிஎம்சி-யாக அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT