சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக சென்னையில் பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பாரிமுனை, சவுக்கார்பேட்டையில் பல்வேறு நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகள் இயங்கி வருகின்றன.
இங்கு, பழைய நகைகளை வாங்கி உருக்கி புதிய நகைகளைச் செய்வது, தங்கக்கட்டிகள் வாங்கி நகைகளைச் செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாரிமுனை, சவுக்கார்பேட்டையில் உள்ள 6 நகைக்கடை மற்றும் பட்டறைகள், தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் அமைந்துள்ள மோகன்லால் நகைக்கடை, வெங்கடேஸ்வரா நகைக் கடைகள் மற்றும் சவுக்கார்பேட்டை வீரப்பன் தெருவில் உள்ள நகைக்கடைகள் என 6-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அமலாக்கத் துறை சோதனை நடைபெற்ற கடைகளில் ஏற்கெனவே, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றுள்ளதாகவும், அதில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், வெளிநாட்டில் சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து, அந்த ஆவணங்களின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் தற்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தசோதனை நேற்று இரவு தாண்டியும் நீடித்தது.