விருத்தாசலம்: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்கவே மன்றாடும் நிலை உள்ளதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை ஆட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனுக்களோடு வரும் மக்கள், மனுக்களை பதிவு செய்து, அதன் பிறகே ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க முடியும். இப்படி வழங்கப்படும் மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் நடவடிக்கைக்கு ஆட்சியர் பரிந்துரை செய்வது வழக்கம்.
அந்த வகையில் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு மாவட்டம் முழுவதும் இருந்து பலரும் மனுக்களோடு வந்திருந்தனர். அவர்களில் பலர்கையில் மனுவோடு அங்குமிங்கும் அலைந்தபடி சென்று கொண்டிருந்தனர். குழுவாக வந்திருந்த மகளிரும் இப்படி அலைந்தபடி சென்று கொண்டிருந்தனர்.
இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது, "குறிஞ்சிப் பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வானமாதேவி கிராமத்தில் இருந்து வருகிறோம். எங்கள் ஊராட்சியில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தொடர்ந்து நூறு வேலை வழங்கப்படுகிறது. எங்களை புறக்கணிக்கிறார்கள். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தோம். இதை அவர் கண்டுகொள்ளவில்லை. அதனால் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்துள்ளோம்" என்று தெரிவித்தனர். அப்போது மக்கள் குறைதீர் கூட்ட அரங்குக்கு பின்புறம் மனுக்களை பதிவு செய்ய பலரும் முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் பேசிய போது மகேஸ்வரி என்பவர் கூறுகையில், "மாவட்டத்தின் எல்லைப் பகுதியான தொழுதூரில் இருந்து வந்துள்ளேன். எனது கணவர் உயிரிழந்ததால், விதவை உதவித் தொகை கிடைத்து வந்தது. தற்போது அது நிறுத்தப்பட்டு விட்டது. எனவே மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தேன். அதுவும் கிடைக்கவில்லை. காலை6 மணிக்கு ஊரிலிருந்து கிளம்பி, இங்கு வரவே காலை 11 மணி ஆகிவிட்டது. தற்போது 12 மணி ஆகியும் கொண்டு வந்த மனுவை பதிவு செய்ய போராடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் சாப்பிடக் கூட இல்லை. இங்கு பதிவுசெய்து அதன் பிறகு ஆட்சியரை சந்தித்து முறையிட வேண்டும்.
அதன் பிறகு தான் சாப்பிட்டு, ஊருக்கு கிளம்பி செல்ல வேண்டும். ஊருக்கு திரும்பிச் செல்ல இரவு 8 மணியாகி விடும்" என்று தெரிவித்தார். இதுகுறித்து திட்டக்குடிவட்டாட்சியரிடம் முறையிட்டிருக்கலாமே என்ற போது, "அங்கு ஓராண்டாக மனு கொடுத்தும் பயனில்லை. அதனால் தான் ஆட்சியரை சந்திக்க வந்தேன்" என்றார்.
அதேபோன்று பண்ருட்டியை அடுத்த காடாம் புலியூரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தை, வருவாய்த் துறையினரின் உடந்தையோடு உறவினர் அபகரித்துள்ளதாக கடந்த 6 ஆண்டுகளாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து வருகிறார். தற்போது இந்த மனு தொடர்பாக விசாரித்து அறிக்கைதர ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் அவரை அழைத்து விசாரணை நடத்தினார்.
இதுபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மனுக்களோடு வரும் மக்களை அலைக் கழிக்காமல், அவர்களின் குறைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டாட்சியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தீர்த்து வைக்க வேண்டும். தீர்வு ஏற்படாத வகையில் இருந்தால் அதற்கான காரணத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நீதிமன்ற நிலுவையில் உள்ள மனுக்கள் மீது அதற்கான விளக்கத்தையும் அளிக்க வேண்டும் என ஆட்சியர் பலமுறை அறிவுறுத்தியுள்ளார்.
ஆனாலும் அதைக் கண்டு கொள்ளாமல் மனுதாரர்களை அலைக் கழிப்பதை அதிகாரி கள் வாடிக்கையாகக் கொண்டி ருப்பதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுப்பாரா? என பொதுமக்கள் எதிர்பார்க் கின்றனர்.