கட்டிட விபத்தில் சிக்கி அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து இருந்த இளைஞர் யார் என்பது அவர் வைத்திருந்த செல்போன் மூலம் உறுதி செய்யப்பட்டது.
ராயப்பேட்டையில் லோகேஸ்வர் ராவ் என்பவரின் உடலை அப்பாராவ் என்பவர் பெற்றுக் கொண்டார். அவர் கூறுகையில், ‘‘நாங்கள் ராயபுரத்தில் உள்ள கட்டிடத்தில் பணியாற்றி வருகிறோம். கட்டிட விபத்து குறித்து கேள்விப்பட்டு மவுலிவாக்கம் சென்றோம். கடந்த 4 நாட்களாக லோகேஸ்வர் ராவை தேடி வந்தோம். லோகேஷ்வர் ராவின் தந்தை பெயர் ராமுலு, தாயார் நரசிம்மா(63). அவரது அண்ணன் ஸ்ரீசீனு சாலை விபத்தில் ஏற்கெனவே இறந்துவிட்டார். சின்னா (25), ரவனா (30) என்ற 2 தங்கைகள் உள்ளனர்.
வறுமையின் காரணமாக ஒடிசாவிலிருந்து லோகேஸ்வர் ராவ் எங்களுடன் கட்டிட பணிக்கு வந்திருந்தார். கடந்த ஒரு மாதமாகத்தான் பணி செய்துவந்தார். கட்டிட விபத்தில் அவர் சிக்கி இறந்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்த அவரது உடலை பார்த்தோம். முகம் தெரியாமலும், உடல் அழுகிய நிலையிலும் இருந்தது. இருப்பினும், அவருடைய சட்டை மற்றும் பேண்ட்டை பார்த்து அடையாளம் தெரிந்தது. பின்னர், அவர் வைத்திருந்த செல்போனை எடுத்து பார்த்ததுபோது, லோகேஸ்வர் ராவ்தான் என்று உறுதி செய்தோம்’’ என்றார்.