கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 87-வது நினைவு நாளையொட்டி, சென்னை காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் துறை உயர் அலுவலர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 
தமிழகம்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 87-வது நினைவு தினம்: முதல்வர், தலைவர்கள் புகழஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை: அரசு சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 87-வதுநினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கிண்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசுசார்பில், வ.உ.சி. படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல்கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசு சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 87-வது நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உ.சிதம்பரனார் படத்துக்கு மலர்கள் தூவியும், அருகில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.

அவருடன் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோரும் பங்கேற்று, வ.உ.சிதம்பரனாரின் படத்துக்கு மரியாதை செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எக்ஸ் தளத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

முதல்வர் ஸ்டாலின்: ‘மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும், நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ" என மகாகவி பாரதி மனம் நொந்து பாடும் அளவுக்குக் கோவைச் சிறையில் கொடுமைக்குள்ளான வீரர்வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள்இன்று. தன் இளமை, சொத்து,பாரிஸ்டர் பட்டம் என அனைத்தையும் இழந்து வாழ்நாளெல்லாம் இந்திய விடுதலைக்காகப் போராடிய தனிப்பெரும் தியாகசீலராம் கப்பலோட்டிய தமிழரை நன்றிப்பெருக்குடன் நினைவுகூர்வோம். அவரது பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: ஆங்கிலேய ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து நம் தாய் நாட்டின் விடுதலைக்காகவும், தொழிலாளர்களின் உரிமைக்காகவும் போராடி சிறைச் சென்ற தியாகி வ.உ.சி. நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திக தலைவர் கி.வீரமணி ஆகியோர் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT