திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் தொடர் மழையால் 450 ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து, நேற்றும் விட்டுவிட்டு கனமழை பெய்தது. மாவட்டத்தில் 3.15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஏற்கெனவே பெய்த தொடர் மழையால், 1,800 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
மீண்டும், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் நன்னிலம் பகுதியில் உள்ள அதம்பார், வாழ்க்கை, வடகுடி, கம்மங்குடி, புத்தகலூர், முகுந்தனூர், வேலங்குடி, திருக்கொட்டாரம் ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 450 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. தண்ணீர் வெளியேறாமல் வயலிலேயே தேங்கியுள்ளதால், குளம்போல காட்சியளிக்கிறது. தொடர்ந்து, மழை பெய்தால் சம்பா பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நன்னிலம் விவசாயிகள் கூறியது: மழைநீர் வடிகால்கள் முறையாக தூர் வாரப்படாததால், மழைநீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழை நின்றதால், மழைநீர் வெளியேறின. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருவதால், விளை நிலங்களில் மீண்டும் மழைநீர் சூழ்ந்துள்ளது. சம்பா பயிர்கள் அழுகுவதை தடுக்கும் வகையில், வயலில் தேங்கியுள்ள மழைநீரை விரைவாக வெளியேற்ற அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டரில்): திருவாரூர் 26, நன்னிலம் 66, நீடாமங்கலம் 53, பாண்டவையாறு, திருத்துறைப்பூண்டி தலா 28.80, முத்துப்பேட்டை 18.40, குடவாசல் 9.40.