மதுரை: “தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு இது சரியான தருணம்” என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சமீபத்தில் கேரளாவில் இருந்து லாரியில் மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் குருவன்கோட்டை கிராமத்தில் கொட்டினர். அந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். அந்த லாரியை போலீஸார் பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்தோம். இந்நிலையில், அந்த லாரியை உரிமையாளரிடம் ஒப்படைக்க ஆலங்குளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லாரியை விடுவித்தால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். எனவே, லாரியை விடுவிக்குமாறு ஆலங்குளம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் வாதிடுகையில், விதிகளை மீறி கேரளாவில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் தமிழக எல்லைக்கு வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டியுள்ளனர். அந்த லாரியை விடுவித்ததை அனுமதிக்கக் கூடாது என்றார்.
பின்னர் நீதிபதி, “தமிழகத்தில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நோக்கத்தில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை விடுவித்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. மருத்துவக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வருவதற்கு இது சரியான நேரம்” என உத்தரவிட்டார்.