தமிழகம்

பொது மருத்துவமனை கல்லீரல் மருத்துவ துறைக்கு ரூ.7.87 கோடி வருவாய்: முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் முதலிடம்

செய்திப்பிரிவு

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை கல்லீரல் மருத்துவத் துறை மட்டும் ரூ.7.87 கோடி வருவாய் ஈட்டி முதல் இடத்தில் உள்ளது.

உலக கல்லீரல் அழற்சி தினத்தை (ஹெபடைடிஸ் பி) முன்னிட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லீரல் மருத்துவத் துறை தலைவர் டாக்டர் கே.நாராயணசாமி தலைமை தாங்கினார்.

மருத்துவமனை டீன் ஆர்.விமலா கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கருத்தரங்கில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். ஹெபடைடிஸ் பி வைரஸால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு மற்றும் அவற்றில் இருந்து பாதுகாப்பது பற்றி டாக்டர்கள் தெளிவாக பொதுமக்களுக்கு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக டாக்டர் கே.நாராயணசாமி கூறியதாவது:

கல்லீரலில் ஏற்படும் வீக்கம்தான் கல்லீரல் அழற்சி எனப்படுகிறது. தமிழகத்தில் 4 முதல் 6 சதவீதம் பேர், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கல்லீரலில் ஏற்படும் புற்றுநோய், 80 சதவீதம் ஹெபடைடிஸ் பி உள்ளவர்களுக்கே வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள கல்லீரல் துறையில், தினமும் வெளிநோயாளிகளாக 120 முதல் 160 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தினமும் 25 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அதன்படி ஆண்டுக்கு சுமார் 11 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

ரூ.7.87 கோடி வருவாய்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட 9,552 ஏழை மக்கள் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில், 9,248 நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கல்லீரல் மருத்துவத் துறை ரூ.7.87 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதன் மூலம் கல்லீரல் மருத்துவத் துறை முதல் இடத்தில் உள்ளது.

இவ்வாறு டாக்டர் கே.நாராயணசாமி கூறினார்.

SCROLL FOR NEXT