புதுச்சேரி: புதுச்சேரியில் பெய்த தொடர் கனமழை காரணமாக, மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
புதுச்சேரி அடுத்த பாகூர் பகுதியில் 22 ஏரிகள், குளங்கள், படுகை அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரிக்கு, சொர்ணாவூர் அணைக் கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக தண்ணீர் வருகிறது. பாகூர் ஏரி முழு கொள்ளளவான 3 மீட்டரை எட்டியுள்ள நிலையில், 3.6 மீட்டர் என்ற அளவுக்கு அதிக பட்ச நீரை சேமிக்கும் பணியில் பொதுப் பணித்துறை நீர் பாசன பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அரங்கனூரில் உள்ளபாகூர் ஏரியின் உபரி நீர் வெளியேறும் கலிங்கல் பகுதியில் உள்ள 21 கண்களில் 20 செ.மீ உயரம் கொண்ட தடுப்பு கட்டை போடப்பட்டு, நீர் சேமிக்கும் பணி மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதபோல் திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு – திருவக்கரை சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பொதுப் பணித்துறை நீர் பாசன பிரிவு மூலம் தடுப்பணை அமைக்கப்பட் டுள்ளது. தொடர் மழையால் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பணை, தற்போது முழுவதும் நிரம்பி தண்ணீர் வழிந்தோடுகிறது.
நிரம்பி வழிந்து வரும் தண்ணீரில் அப்பகுதி இளைஞர்கள் மீன்பிடித்து வருகின்றனர். பொதுமக்களும் தடுப்பணை பகுதியை கண்டு ரசிப்பதுடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். தடுப்பணை நிரம்பியுள்ளதால், செட்டிப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் கனமழை காரணமாக சங்கராபரணி ஆற்றின் குறுக்கேயுள்ள கூனிச்சம்பட்டு, கைக்கிலப் பட்டு தடுப்பணைகளிலும் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.
அதே நேரத்தில் செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் படுகை அணை உடைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டப்படாததால் தொடர் மழை பெய்தும் தண்ணீர் தேங்க வழியின்றி வீணாக வெளியேறி வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் வேதனை அடைந் துள்ளனர். புதிய அணை கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.