தமிழகம்

சேலம் திமுக இளைஞரணி மாநாடு: குமரியில் இருந்து வாகன பேரணி தொடக்கம்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இளைஞரணி நிர்வாகிகளின் மோட்டார் சைக்கிள் பேரணியை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த வாகன பேரணி 234 சட்டப்பேரவை தொகுதி களுக்கும் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் உதயநிதி பேசியதாவது: பேரணியில் கலந்து கொண்டுள்ள நிர்வாகிகள் மாவட்டந் தோறும் சென்று மக்களை சந்தித்து திமுக அரசின் கொள்கைகள், சாதனைகளை விளக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இணைய தளம் மூலமாக 9 லட்சம் பேரும், போஸ்ட் கார்டு மூலம் 10 லட்சம் பேரும் கையெழுத் திட்டுள்ளனர். ஒரு மாதத்தில் 50 லட்சத்தை தாண்டி கையெழுத்து பெற வேண்டும். வாகன பேரணி மேற்கொண்டுள்ள 188 பேரும், 15 நாட்களில் 8,400 கி.மீ. பயணம் செய்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் 3 லட்சம் பேரை சந்திக்க உள்ளார்கள். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ் கலந்து கொண்டனர். பிரச்சார பேரணி நேற்று கன்னியாகுமரி, குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, பத்மநாபபுரம் மற்றும் நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்றது. இன்று (16-ம் தேதி) திருநெல்வேலி, நாளை தூத்துக்குடி மாவட்ட தொகுதிகளுக்கு செல்கிறது. தொடர்ந்து தென்காசி, விருதுநகர் வழியாக நவம்பர் 27-ம் தேதி சேலம் சென்றடைகிறது.

நேரில் அஞ்சலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம். சரவணனின் தந்தை மாரியப்பபிள்ளை நேற்று மரண மடைந்தார். திருநெல்வேலி டவுனில் உள்ள இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, மேயர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

SCROLL FOR NEXT