தமிழகம்

ஜெ., பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமிக்கு விசாரணை ஆணையம் சம்மன்

செய்திப்பிரிவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமி நேரில் ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, நீதிபதி அ.ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் மனுக்களாகவும், பிரமாண பத்திரங்களாகவும் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் முன்னாள் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் இருந்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு, மருத்துவக் கல்வி இயக்குனர் விமலா, மயக்கவியல் துறை பேராசிரியை கலா, அரசு மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ஜெ.தீபக் உள்ளிட்டோர் விசாரணை ஆணையத்துக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தொடர்பான வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக தன்னிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தினகரனுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையில் தினகரன் சார்பில் சில வீடியோ காட்சிகள் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அந்த வீடியோ காட்சிகள் மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டது என்பதால், அது குறித்து விசாரிப்பதற்காக அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாகப் பிரிவு மருத்துவர் சத்யபாமா நேரில் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதனைத் தொடர்ந்து, அவர் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜராகி, பிற்பகல் 1.30 மணி வரை வாக்கு மூலம் அளித்தார். பின்னர் அவர் கிளம்பிச் செல்லும்போது, ஊடகங்களை தவிர்க்கும் விதமாக, விசாரணை ஆணையம் இயங்கும் கல்சா மகாலில், ஊடகத்தினர் நின்றிருந்த வழியை தவிர்த்து மாற்று வழியில் வெளியேறினார்.

5 பேருக்கு சம்மன்

அடுத்த வாரம் நடைபெறும் விசாரணையில் 5 பேர் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி வரும் 8-ம் தேதி ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார், 9-ம் தேதி ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், 10-ம் தேதி ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமி, 11-ம் தேதி அரசு மருத்துவர் பாலாஜி, 12-ம் தேதி அரசு இதய நோய் சிகிச்சை மருத்துவர் சாமிநாதன் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

SCROLL FOR NEXT