வேலூர்: வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை முதல் நாள் முழுவதும் சாரல் மழை பெய்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தென் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. வேலூரில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. விட்டு, விட்டு பெய்து வரும் சாரல் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சாரல் மழையால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டப்படி சென்றன. சாரல் மழையால் பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டனர். மேலும், வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களில் சேறும், சகதியுமாக மீண்டும் மாறியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.