சென்னை: சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கு காப்புத்தொகை செலுத்தும் காலத்தை நவ.30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் குடிநீர் தேவைக்கான நிலையை கருதி மேட்டூர் அணை கடந்த அக்.10-ம் தேதி மூடப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பயிர் இழப்புக்கு முழு நிவாரணம் வழங்கப்படாத நிலையில், குறுவை காப்பீடு திட்டமும் அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் எதிர்கால குடும்ப வருமானத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் பலர் தற்போது சம்பா, தாளடி சாகுபடியை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே தமிழக அரசின் பயிர் காப்பீட்டுக்கான காப்புத்தொகை செலுத்தும் காலக்கெடு நாளையுடன் (நவ.15) முடிவடைகிறது. ஆனால் நீர் பற்றாக்குறை சூழலில் தமிழக அரசின் தெளிவான வழிகாட்டல் இல்லாதது, சான்றுகள் வழங்குவதில் புதிய நிலை, காப்பீடு திட்டத்தின் மீது உள்ள நம்பிக்கையின்மை, தீபாவளியையொட்டி 2 நாட்கள் அரசு விடுமுறை போன்றவற்றால் இதுவரை 70 சதவீத விவசாயிகளே காப்பீடு செய்துள்ளனர்.
எனவே காப்புத்தொகை செலுத்தும் காலத்தை வரும் நவ.30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். மேலும் சம்பா, தாளடி பயிரிட்டபின்தான் சான்று அளிக்கப்படும் என்று பல்வேறு இடங்களில் வருவாய்த் துறை வலியுறுத்தி வருகிறது. பயிரிடுபவர் சான்றிதழை வருவாய்த் துறை உடனடியாக வழங்க வேண்டும்.
அதேபோல வழக்கமான முறையில் வருவாய்த் துறை வழங்கும் சான்றை சேவை மையங்கள் மறுத்து, ஆதாரில் தந்தை பெயரை சான்றில் சேர்த்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இம்முறை மூலம் உரிய விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். எனினும் இதனை காலத்தில் அறிவித்து இந்த நிலையிலேயே வருவாய்த் துறை சான்றளித்திட ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.