திருத்தணி: 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிப்பார்’ என்று அம்மாநில சுற்றுலா துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. ஆந்திர மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா நேற்று திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தன் கணவர் ஆர்.கே.செல்வமணியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
வெள்ளி வேல் காணிக்கை: இந்த சுவாமி தரிசனத்துக்கு வெள்ளி வேலுடன் கோயிலுக்கு வந்த ரோஜா, ஆபத்சகாய விநாயகர், மூலவரான சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் சண்முகர் சந்நிதிகளில் வெள்ளி வேல் வைத்து, வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, அந்த வெள்ளிவேலை கோயிலுக்கு காணிக்கையாக அளித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் ஆந்திர அமைச்சர் ரோஜா கூறும்போது, “2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி பிடித்து, மக்களுக்கு நல்லாட்சி தருவார்” என்றார்.