தமிழகம்

தனிக் கட்சி தொடங்குவது குறித்து நாளை முடிவு: டிடிவி தினகரன்

செய்திப்பிரிவு

தனிக் கட்சி தொடங்குவது தொடர்பாக ((நாளை) எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் முடிவு செய்யப்படும் என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

வானூர் அருகே குயிலாபாளையம் பண்ணை வீட்டில் தங்கி பொங்கல் விழாவை குடும்பத்துடன் கொண்டாடிய டிடிவி.தினகரன், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோத்தகிரி செல்லும் வழியில் வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், "குருட்டு அதிர்ஷ்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதால் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற மத்திய அரசிடம் கோரிக்கைதான் வைக்க முடியும்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வரும்.

இரட்டை இலை சின்னம் தவறானவர்கள் கையில் சிக்கியுள்ளது. அதிமுகவின் சட்டதிட்டத்தின் படி பெரும்பான்மையான தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்கள் என பார்க்காமல் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியதற்கு ஆர்.கே நகர் தொகுதி மக்கள் வெற்றியை தந்து நிரூபித்து உள்ளனர்.

7.5 கோடி தொண்டர்களின் எண்ணத்தை ஆர்.கே நகர் மக்கள் பிரதிபலித்துள்ளனர். வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஆர்.கே.நகர் மக்களிடம் பணம் கொடுத்து வெற்றிபெற்று விட்டதாக தாழ்த்தி பேசி வருகின்றனர்.

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பேன். அதிமுகவின் தொண்டர்களில் 90 சதவீதம் பேர் எங்களுடன் உள்ளனர். எனவே இத்தனை தொண்டர்களும் பேரவை இல்லாமல் செயல்பட முடியாது. இது தொடர்பாக பொது செயலாளர் சசிகலாவிடம் பேசிவிட்டு வந்தேன்.

தனிக் கட்சி தொடங்குவதற்கு எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படுவேன். தனிக் கட்சி தொடங்குவது தொடர்பாக ((நாளை) எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் முடிவு செய்வோம். தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறுவோம்" இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT