அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக தனி இருக்கை அமைப்பதற்காக சென்னையைச் சேர்ந்த 80 வயது முதியவர் ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ரவி வெங்கடாச்சலம் என்பவரே அந்த நன்கொடையை வழங்கியுள்ளார். வங்கிப் பணியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய வெங்கடாச்சாலம், தனது ஓய்வுகாலத்துக்கு பின் பங்குச்சந்தை வர்த்தகத்தில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க ரூ. 40 கோடி நிதி திரட்டும் முயற்சியில் தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு ரூ.10 கோடி அளிக்க முன்வந்துள்ளது. தமிழை நேசிக்கும் பல்வேறு நாடுகளில் உள்ள மனிதர்களும் இயன்ற நிதி உதவிகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த 80வயதான ரவி வெங்கடாச்சலம் சமீபத்தில் ரூ.25 லட்சம் நிதிஉதவியை தமிழ் இருக்கைக்காக அளித்துள்ளார்.
வட அமெரிக்க தமிழ் சங்கம், இசைக்கடல் பன்பாட்டு அறக்கட்டளை ஆகியவை இணைந்து கடந்த மாதம் 29ந்தேதி சென்னையில் பொங்கல் விழா நடத்தியது. அதில் கலந்து கொண்ட வெங்கடாச்சலம், இந்த நிதி உதவியை வழங்குவதாக தெரிவித்தார்.
இது குறித்து தி இந்துவுக்கு (ஆங்கிலம்) ரவி வெங்கடாச்சலம் அளித்த பேட்டியில் கூறியதாவது-
நான் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டவன். தமிழுக்கு என்னால் முடிந்த சிறிய பங்களிப்பாக இந்த தொகையை கருதுகிறேன். மிகத் தொன்மையான மொழியான தமிழை பாதுகாக்கவும், வளர்க்கவும் இந்த தொகை உதவட்டும்.
என்னுடைய மகன் மனோகர் வெங்கடாச்சலம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் டலாஸ் நகரில் வசித்து வருகிறார். அவர் தன்னுடைய பங்களிப்பாக ரூ.7 லட்சத்தை தமிழ் இருக்கை அமைய நன்கொடை அளித்திருக்கிறார். அவரின் மனைவி புவி மனோகர் அவரின் தலைமையில் தமிழ் இருக்கை அமைய ரூ.3.25 கோடி(5லட்சம் டாலர்) நிதி திரட்டி வழங்கியுள்ளார்
நான் அழகப்பா பல்கலையில் இளங்கலை பட்டம் முடித்தபின், கடந்த 1957-58ம்ஆண்டு பல்கலையின் பேச்சாளராக முன்மொழியப்பட்டேன். பின் சென்னையில் மாநிலக் கல்லூரியில் சேர்ந்தபின், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பல்வேறு இலக்கிய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்று இருக்கிறேன். நான் மேற்கு வங்காளத்தில் பணியாற்றியபோது, அங்கு தமிழ் மன்றத்தின் தலைவராகவும் இருந்தேன்.
சமீபகாலமாக ஆங்கில மொழி மீதான மோகத்தால், தமிழ் மொழி சரிவைச் சந்தித்து வருகிறது. தமிழக அரசு முயற்சிகல் எடுத்து தமிழ் மொழியை காக்க வேண்டும், பள்ளிகளில் தமிழ் மொழிக் கற்றலை ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக்கல்விக்கு மாற்றுவது தமிழுக்கு செய்யும் நன்றிக்கடன் ஆகாது
இவ்வாறு ரவி வெங்கடாச்சலம் தெரிவித்தார்.