தமிழகம்

ராஜபாளையம் அருகே லஞ்சம் வாங்கிய பில் கலெக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையம் அருகே கட்டிடவரைபட அனுமதி வழங்குவதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் காமராஜ் உள்ளிட்ட 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர், தனக்குச் சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக கட்டிட வரைபட அனுமதி (பிளான்அப்ரூவல்) கேட்டு, செட்டியார்பட்டி பேரூராட்சியில் விண்ணப்பித்தார். அனுமதி வழங்குவதற்கு பில் கலெக்டர் (வரி தண்டலர்) காமராஜ் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் 2018 பிப்ரவரி 14-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து, காமராஜ்மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த குடிநீர்த் தொட்டி ஆபரேட்டர் சதீஷ்குமார் ஆகியோரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில், பில் கலெக்டர் காமராஜ் கடந்தஜனவரி மாதம் சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் பணியாற்றியபோது, ஓய்வுபெறுவதற்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சதீஷ்குமார் மம்சாபுரம் பேரூராட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த வழக்கில் காமராஜ், சதீஷ்குமார் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எம்.ப்ரீத்தா நேற்று தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT