சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் இந்தியாவின் பழமையான உயிரியல் பூங்காக்களில் ஒன்றான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்கா, வன விலங்குகளுக்கான இனப்பெருக்க திட்டத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக புலிகளை இனப்பெருக்கம் செய்வதில் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. அதனால்தான், இங்குள்ள புலிகள், விலங்கு பரிமாற்ற திட்டத்தின் மூலம் இதர உயிரியல் பூங்காக்களுக்கு பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரின் ஜம்பு உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி இமாலயன் கருப்பு கரடிகள் வண்டலூருக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டன. இதற்கு மாற்றாக ஒரு இணை வங்கப்புலிகளை வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ஜம்மு தாவியில் இருந்து சென்னைக்கு வந்த அந்தமான் விரைவு ரயிலில் சிறப்பு பெட்டி இணைக்கப்பட்டு, ஒரு ஜோடி இமாலயன் கரடிகள் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றை பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து, தனிமைப்படுத்தப்பட்ட தற்காலிக அறைகளில் வைத்துள்ளனர்.
கால அவகாசம் முடிந்ததும் உயிரியல் பூங்காவின் காட்சிப் பகுதிக்கு விலங்குகள் மாற்றப்படும். அதேபோல, வரும் 15-ம் தேதி ஜம்முவுக்கு திரும்பும் இதே ரயிலில் ஒருஇணை வங்கப்புலிகளை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், ஜம்மு உயிரியல் பூங்காவில் புலிகளை பராமரிப்பது இதுவே முதல்முறை என்பதால், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் ஊழியர்களிடம் இருந்து ஒரு வாரத்துக்கு புலிகளை பராமரிப்பது குறித்து நேரடி பயிற்சி வழங்கப்பட உள்ளது.