மேட்டூர்: கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக நடைபெறும் பவானி-தொப்பூர் சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பவானி-மேட்டூர்-தொப்பூர் சாலையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நடக்கின்றன. இதனால், பவானி-மேட்டூர்-தொப்பூர் வரையிலான 85 கிமீ சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது.
தொடர்ந்து, 7 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலையை 10 மீட்டராக விரிவாக்கம் செய்யும் பணி, 2021 ஆகஸ்ட் மாதம் ரூ.186 கோடி செலவில் தொடங்கப்பட்டது. இதற்காக சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. சிறிய பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், சாலை விரிவாக்கப் பணி தொடர்ச்சியாக நடைபெறாமல் ஆங்காங்கே நடைபெறுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, விபத்து அபாயமும் நிலவி வருகிறது. அதேநேரத்தில், பாதாள சாக்கடை பணிகளும் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: மேட்டூர், மேச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொழிற்சாலைகள், விவசாயம் என பல்வேறு வேலைவாய்ப்புக்காக மக்கள் பல ஆயிரம் பேர் வெளியூர், உள்ளூரில் பணிபுரிகின்றனர். தொழிற்சாலைகள் அதிகளவில் இயங்கி வருவதால் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. பேருந்து சேவை, மினி சரக்கு வாகனங்கள் ஆகியவை பவானி- மேட்டூர்- தொப்பூர் சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. 2021 ஆகஸ்ட் மாதம் முதல் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் பெரும்பாலும் முடிவடையாமல் உள்ளன. இது ஒருபுறம் இருந்தாலும், சாலையின் இருபுறமும் பாதாள சாக்கடை பணிகளும் நடைபெறுகின்றன.
சாலை விரிவாக்கப் பணி, பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் நிலையில், அதுகுறித்த அறிவிப்பு பலகை, சிவப்பு விளக்கு ஆகியவையும் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் வேகமாக வரும் லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் தடுப்பு இருப்பது தெரியாமல் மோதி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. அதேபோல், சாலை விரிவாக்கப் பணியின் போது, பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களின்றியும் பணிபுரிகின்றனர். சாலையின் விரிவாக்கத்துக்காக இருபுறமும் பள்ளம் தோண்டி, கற்கள் கொட்டப்பட்டு வருகின்றன. மழைக் காலம் என்பதால் பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகனங்கள் தடுமாறி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. பகலில் போக்குவரத்து பாதிப்பும், இரவில் விபத்து அபாயமும் இருப்பதால் சாலைப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.