திருக்காஞ்சி வேதவள்ளி நகர், யுவராஜ் நகர், சீதாராமன் நகர் பகுதிகளில் மின்கம்பம் இல்லாமல் மூங்கில் கம்பங்களை வைத்து மின் வழித்தட கம்பிகளுக்கு முட்டு கொடுக்கப்பட்டுள்ளது. 
தமிழகம்

மூங்கில் கட்டைகளை முட்டு கொடுத்து கொண்டு செல்லப்படும் மின்கம்பிகள்: கண்டுகொள்ளுமா புதுச்சேரி அரசு?

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் மங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் வில்லியனூர் திருக்காஞ்சி வேதவள்ளி நகர், யுவராஜ் நகர், சீதாராமன் நகர் பகுதிகளில் பல வருடங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் முறையாக வீட்டு வரி, தண்ணீர் வரி ஆகியவற்றை புதுச்சேரி அரசுக்கு செலுத்தி வருகின்றனர். இங்கு குடியிருப்போர் வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான மின் இணைப்புகள் தரப்படாத அவலம் நீடிக்கிறது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், “எளிய சாமானிய மக்களான நாங்கள் வங்கிகளில் கடன் பெற்றுத்தான் வீடுகளை கட்டினோம். வீடு கட்டுவதற்கு புதுச்சேரிஅரசிடம் கடும் முயற்சி செய்து அப்ரூவல் பெறுகிறோம். அதையும் தாண்டி வீடு கட்ட மின் இணைப்புகள் பெற அதிகளவு பணம் செலவு செய்யவேண்டியுள்ளது. குறிப்பாக, வீட்டு மின் இணைப்பு பெறுவதற்கு தேவையான மின்கம்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 30 ஆயிரம் வழங்கினால் மட்டுமே, எங்கள் பகுதியில் புதிய மின்கம்பங்கள் பொருத்தப்படும் என்கின்றனர். புதுச்சேரி அரசே திட்டமிட்டு இதை செய்கிறது” என்றனர். இதனால், மூங்கில் கம்பங்கள் மூலம் மின்கம்பிகள் கொண்டு செல்லப்படுகின்றன.

இதுபற்றி நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க மாநிலச் செயலாளர் ரமேசு கூறுகையில், “அரசியலில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர்கள் பலரும் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்கின்றனர். அவர்கள் விற்பனை செய்யும் வீட்டு மனைகளுக்கு உடனே அப்ரூவல் தரப்பட்டு, குடிநீர் இணைப்பு, சாலை வசதி, மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. அந்தப் பகுதிகளில் மின் கம்பங்களுக்கு இதுபோன்ற சிக்கல்கள் இல்லை. அப்படி இல்லாத இடங்களில் இம்மாதிரியான சிக்கல்களை உருவாக்குகின்றனர். ஒரு அமைச்சர் தொகுதியில் உள்ள இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுவது கண்டிக்கக்தக்கது. இந்த மூங்கில் கம்பங்கள் எப்போதும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. சுமார் 500 பேர் ஆபத்தான சூழலில் வசிக்கின்றனர். மின்துறை அமைச்சர் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் சாலை வசதியையும் ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT