பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

குமரியில் நீடிக்கும் கனமழை: பொட்டல்குளம் உடைந்து கிராமத்துக்குள் வெள்ளம்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கடை அருகே பொட்டல்குளம் உடைந்து ஊற்றுக்குழி கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது.

நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. நாகர்கோவிலில் நேற்று காலையிலும் மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக களியல் பகுதியில் 76 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் மலையோரப் பகுதியான பாலமோரில் பெய்யும் மழையால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் நேற்று காலை 43.87 அடியாக இருந்தது.

அணைக்கு 465 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.17 அடியாக உள்ளது. அணைக்கு 662 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வள்ளியாறு, பரளியாறு மற்றும் பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஆறுகளின் கரையோரப் பகுதிகளுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. புதுக்கடை அருகே ஊற்றுக் குழி பொட்டல் குளம் உடைப் பெடுத்ததால் தண்ணீர் ஊற்றுக் குழி கிராமத்துக்குள் புகுத்தது. பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். குளம் உடைப்பை சீர் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரியுள்ளனர்.

SCROLL FOR NEXT