தமிழகம்

மெக்கானிக் முதல் ‘மாண்புமிகு’ வரை... - எ.வ.வேலு ‘வல்லமை’ வரலாறு!

இரா.தினேஷ்குமார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் (முந்தைய விழுப்புரம் மாவட்டம்) அடுத்த மணலூர்பேட்டை அருகே கூவனூர் கிராமத்தில் விவசாயி எத்திராஜ் - சரஸ்வதி தம்பதிக்கு கடந்த 15-03-1951-ல் மகனாக பிறந்தவர் வஜ்ஜிரவேலு. பள்ளி படிப்புக்கு பிறகு, குடும்ப சூழ்நிலையால், டீசல் இன்ஜீன் மெக்கானிக் தொழிலில் நுழைந்தார். பின்னர், பிழைப்பு தேடி வடக்கு நோக்கி நகர்ந்து, திருவண்ணாமலையில் தாமோதிரன் பேருந்தில் நடத்துநராக பணியாற்றினார். அப்போது கண்டக்டர் வேலு என அழைக்கப்பட்டார். பின்னர், ஜீவா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, மனைவியின் சொந்த ஊரான தண்டராம்பட்டு அருகே உள்ள சே.கூடலூர் கிராமத்தில் குடியேறினார். இவர்களுக்கு குமரன், கம்பன் என இரு மகன்கள் உள்ளனர்.

வாழ்க்கையின் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருந்த கண்டக்டர் வேலு, எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பதால், அதிமுகவில் இணைந்து முன்னணி நிர்வாகிகளின் நட்பை ஏற்படுத்தி கொண்டார். இதன்மூலம் கடந்த 1977-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிட முயற்சி செய்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கையில் இரட்டை இலை சின்னத்தை பச்சை குத்திக் கொண்டுள்ளார். சினிமா மீது இருந்த மோகத்தால் ஒருசில படங்களில் நடித்தபோது, திரைப்பட பிரபலங்களின் அறிமுகம் கிடைத்தது. அரசியல், சினிமா என இரண்டும் இரு கண்களாக இருந்தன.

திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தவரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ப.உ.சண்முகத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்ந்தார். கட்சி பணிகளில் கவனத்தை செலுத்தினார். இதன் பயனாக, 1984-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிட்டு, திமுகவில் பிரபலமாக இருந்த வேணுகோபாலை (தற்போது, மாவட்ட திமுக அவைத் தலைவர்) வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். பின்னர், மாவட்ட அதிமுக துணை செயலாளர் பதவி அலங்கரித்தது.

இதையடுத்து, தண்டராம்பட்டு வேலு என அழைக்கப்பட்டார். அதிமுகவில் இருந்த 2-ம் கட்ட தலைவர்களுடன் மிகுந்த நட்பை வளர்த்து கொண்டார். இதற்கிடையில், திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகே சிறியளவில் வீடு கட்டினார். அமெரிக்காவில் எம்ஜிஆர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையின் பெயரையே, “புரூக்ளின் இல்லம்” என தனது வீட்டுக்கு சூட்டினார். இப்போதும், இந்த வீடு உள்ளது. இதில், அவரது சகோதரர் மனோகரன் குடும்பம் உள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஜெயலலிதா, ஜானகி அம்மாள் தலைமையில் 2 அணிகள் செயல்பட்டன. முன்னணி தலைவர்களான ஆர்.எம்.வீரப்பன், ப.உ.சண்முகம் ஆகியோரது விசுவாசியாக இருந்ததால், ஜானகி அம்மாள் அணியில் இடம்பெற்றார். 1989-ல் நடைபெற்ற தேர்தலில், தண்டராம்பட்டு தொகுதியில் ஜானகி அணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் ஏற்பட்ட அரசியல் நகர்வு, அதிமுக ஒருங்கிணைந்தது. ஜெயலலிதா பொதுச் செயலாளரானார். அப்போது அதிமுகவில் இணைய முயற்சி செய்தும் பலனில்லை. எம்ஜிஆரின் இறுதி சடங்கின்போது நடைபெற்ற சம்பவங்கள், ஜெயலலிதா மனதில் இருந்து விலகாததால், அதிமுகவில் இணையும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ராசிபுரம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமலிங்கம் (பாஜக மாநில துணைத் தலைவர்) உள்ளிட்டோர் உடனான நட்பு, தடையாக இருந்தது என பேசப்பட்டன. ஜெயலலிதாவின் ஆசியை பெற, “காவிரி தந்த கலைச் செல்வியே” எனும் புத்தகத்தை எழுதி, அவரது திருக்கரங்களால் வெளியிட காத்திருந்தும் ஏமாற்றமே மிஞ்சியது. 1991-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு சாதகமான சூழ்நிலை இல்லாததால் ஒதுங்கிக் கொண்டார்.

நடிகர் ரஜினிக்காக யாகம்: வாழ்வில் முன்னேற்றம் என்ற இலக்கை அடைய, திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். விநியோகிஸ்தர், தயாரிப்பாளர் என பயணம் செய்தார். அதேநேரத்தில், அரசியல் மீதான தீராத தாகமும், அவருடன் தொடர்ந்து பயணித்தது. அப்போது, நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வர வேண்டும் என திருவண்ணாமலையில் பிரம்மாண்ட யாகம் நடத்தினார். ரஜினிகாந்த், இதுநாள் வரை அரசியலுக்கு வரவில்லை என்பது தனி கதை. பின்னர், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆர்.எம்.வீரப்பன் தொடங்கிய எம்ஜிஆர் கழகத்தில் இணைந்தார், நடிகர் பாக்கியராஜ் தொடங்கிய கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார். அரசியல் பாதையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆனாலும், நம்பிக்கையை இழக்காமல் மனவலிமையுடன் எதிர்நீச்சல் போட்டார்.

இதற்கிடையில், தமிழகத்தின் கல்வி தந்தைகளின் ஆலோசனையை பெற்று, தனது தாயார் சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை உருவாக்கி, கல்வி நிறுவனங்களை தொடங்கினார். திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் அருகே, தனது மகன் கம்பன் பெயரில் ஐடிஐயை முதன் முதலாக தொடங்கினார். தென்மாத்தூரில் சுமார் 20 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு கல்வி நிறுவனம் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டார்.

இப்போது, 200 ஏக்கர் பரப்பளவில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி உட்பட பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை பெயரில் சுமார் 12 கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. தற்போது எ.வ.வேலுவை கல்வி தந்தை என அழைக்கப்படுகிறார்.

அரசியல் வாழ்வில் ஏற்றம் கடந்த 1996-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், திமுகவில் தனது 2-ம் கட்ட அரசியல் பயணத்தை தொடங்க நினைத்து, அதற்கான வியூகம் வகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு, உள்ளூர் திமுகவினர் தடையாக இருந்தனர். அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் ப.உ.சண்முகம், மாதவன் ஆகியோரது உதவியை நாடினார். இதில், பலன் கிடைத்தது. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் ஆசியுடன் திமுகவில் இணைந்ததும், அவரது அரசியல் வாழ்வில் ஒளி வீச தொடங்கியது.

திமுகவில் இரட்டை பதவி கூடாது என்ற விதிகள் வந்தபோது, தமிழக வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சராக பதவி வகித்த கு.பிச்சாண்டியிடம் இருந்து, மாவட்ட திமுக செயலாளர் பதவியை பறித்து, எ.வ.வேலுவிடம் கொடுக்கப்பட்டது. இதன்பிறகு, அரசியல் வாழ்க்கை ஏற்றம் பெற தொடங்கியது. திமுக சார்பில் தண்டராம்பட்டு தொகுதியில் 2001 மற்றும் 2006-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பாஜக வளையத்தில்...முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் 2006-2011 வரை உணவுத் துறை அமைச்சராக இருந்தார். இதையடுத்து, தொகுதி சீரமைப்பு நடைபெற்றபோது, தண்டராம்பட்டு தொகுதி நீக்கப்பட்டது. பின்னர், திருவண்ணாமலை தொகுதியில் 2011, 2016 மற்றும் 2021-ல் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் ‘முப்பெரும்’ துறைகளை கவனித்து வருகிறார். தன் கட்சியினரை மட்டுமின்றி எதிர்க்கட்சியினரையும் அரவணைப்பதில் வல்லவர். கொடைவள்ளல் என அழைக்கப்படுகிறார். அரசியல் சாணக்கியனாக வலம் வருகிறார். கல்வி தந்தை, தொழிலதிபர், அரசியல்வாதி என பல்வேறு முகங்களை கொண்டுள்ள அமைச்சர் எ.வ.வேலு, திமுக தலைமைக்கு மிக நெருக்கமாக இருப்பதால், அவரது நடவடிக்கையை பாஜக அரசு கண்காணிக்க தொடங்கிவிட்டது.

இதன் எதிரொலியாக, அவரது வீடு உட்பட தமிழகம் முழுவதும் 80 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 6 நாட்களாக சோதனை நடத்தி முடித்துள்ளனர். இதன் தாக்கம், தமிழக அரசியலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எத்தகைய பாதகங்களையும், தனக்கு சாதகமாக மாற்றும் வல்லமை படைத்தவர் எ.வ.வேலு என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT