சென்னை: மருத்துவப் பொறியாளர்கள் குறைந்த செலவிலான மருத்துவ உபகரணங்களை உருவாக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை சார்பில், மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் மையத்தின் 25-ம் ஆண்டு விழா கொண்டாட்டம் கிண்டியில் உள்ள பல்கலை. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தலைமை வகித்தார்.
பெங்களூரு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன பாதுகாப்பு பயோ-பொறியியல் பிரிவு இயக்குநர் டி.எம்.கோட்ரேஷ், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் கே.நாராயணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
நிகழ்வில் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் பேசியதாவது: மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் மையம் தற்போது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த மையம் கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. முதுநிலை பயோ-மெடிக்கல் பொறியியல் படிப்பு, அண்ணா பல்கலைக்கழகத்தில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது. 230 ஆண்டுகள் பழமையான இந்த பல்கலைக்கழகம் பல துறைகளில் இளநிலை, முதுநிலை பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பயோ-மெடிக்கல் பொறியியல் படிப்பு தனி துறையாக மாற்றப்பட உள்ளது.
அதேபோல, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ஒராண்டுக்கான ஒருங்கிணைந்த பாடத் திட்டத்தையும் மருத்துவ மாணவர்களுக்காக அறிமுகப்படுத்த உள்ளோம். நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக, பெரும்பாலானோருக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. எனவே, மருத்துவப் பொறியாளர்கள் குறைந்த செலவிலான மருத்துவ உபகரணங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.நாராயணசாமி பேசியதாவது: இன்றைய காலகட்டம் தொழில்நுட்பம் சார்ந்த தலைமுறைக்கானது. மருத்துவ உபகரணங்களில் புதிய கண்டுபிடிப்புகள் அவசியம். அரிய வகை மருத்துவத்துக்கு தொழில்நுட்ப உபகரணங்களின் தேவை இன்றியமையாதது” என்றார்.
அண்ணா பல்கலைக்கழக மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை இயக்குநர் எம்.மீனாட்சி, மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் மைய இயக்குநர் எம்.சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.