சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தாமல் நேற்று பயணம் செய்தார்.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும், பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது.
இந்நிலையில், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை. எனவே, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் சொந்த விஷயமாக சிங்கப்பூர் சென்ற பன்னீர்செல்வம், நேற்று விமானத்தில் சென்னை திரும்பினார். அப்போது நீதிமன்ற உத்தரவை ஏற்று விமான நிலையத்தில் இருந்து சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்துக்கு காரில் வந்த பன்னீர்செல்வம், தனது காரில் இருந்த அதிமுக கொடியை அகற்றி இருந்தார். இது, அவரது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழலில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், சட்டரீதியாக எதிர்கொள்வது குறித்தும் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், பெங்களூரு வ.புகழேந்தி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். மேலும், வெள்ளிக்கிழமை (இன்று) மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், அதன் உத்தரவைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆலோசனை கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம், “நாங்கள் கட்சி கரை வேட்டி கட்டுவதை யாரும் தடுக்க முடியாது. நீதிமன்ற உத்தரவுக்கிணங்க கார்களில் கொடி ஏற்றவில்லை. மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதே பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு” என்றார்.