அமைச்சர் சு.முத்துசாமி | கோப்புப் படம் 
தமிழகம்

“யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரியார் சிலையை அகற்ற முடியாது” - அமைச்சர் முத்துசாமி

செய்திப்பிரிவு

ஈரோடு: தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரியார் சிலையை அகற்ற முடியாது, என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஈரோடு திமுக அலுவலகத்தில் நடந்த மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் பெரியார் சிலையை அகற்றுவதாக கூறியிருப்பது தவறான கருத்து. யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரியார் சிலையை அகற்ற முடியாது. திமுகவில் தீவிரமாக பணியாற்றும் பிரமுகர்கள் மீது, சோதனை என்ற பெயரில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிப் காட் தொழிற்சாலைகளால் கடந்த 20 ஆண்டுகளாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண, எந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரும், நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதிக்கக் கூடாது என்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாசடைந்த குளங்களை சுத்தம் செய்யவும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை. மது விற்பனையை குறைக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் காவல் துறை மூலம் எடுக்கப்பட்டுள்ளது. மதுக் கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT