சென்னை: நிதி முறைகேடு புகாரில், செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல் பாக்கம் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகியோரை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், தென்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் எ.கோவிந்தராஜன், ஊராட்சி நிர்வாகத்தில் மிகை செலவினம் செய்தது தொடர்பான குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து ஊராட்சிகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
அதன்பின், இவர் மீதான குற்றச்சாட்டுகள், அதற்கான விளக்கங்கள், தென்மேல் பாக்கம் ஊராட்சி மன்றஉறுப்பினர்களின் கருத்துகள்ஆகியவற்றை உரிய ஆவணங்களுடன் பரிசீலித்ததில், ஊராட்சி மன்ற தலைவர் தன் கடமையில் இருந்து தவறியது நிரூபணமாகியுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, தென்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து கோவிந்தராஜன் நீக்கம் செய்யப்படுகிறார்.
அதேபோல், தென்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், 5-வது வார்டு உறுப்பினருமான சாந்தகுமாரி, ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவரால் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் கண்டறியப்பட்ட குறைபாடுகள், நிதிமுறைகேடுகளை தெரிவிக்க தவறியது மற்றும் உடந்தையாக செயல்பட்டதை அடுத்து, குற்றச்சாட்டுகள், அதற்கான விளக்கங்கள், மன்ற உறுப்பினர்களின் கருத்துகளை ஆய்வு செய்ததில் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது நிரூபணமாகியுள்ளதால், அவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.