சென்னை: சென்னை அரும்பாக்கம் அரசு சித்தா மருத்துவமனையில் 8-வது தேசிய ஆயுர்வேத தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஆயுர்வேத விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். பின்னர், ‘டாம்ப்கால்’ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான தீபாவளி லேகியத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ்நாடு மூலிகை பண்ணை மற்றும் மூலிகை மருத்துவக் கழகமான ‘டாம்ப்கால்’, இந்திய மருத்துவ முறையில் மருந்துகளை தயாரித்து, நாட்டுக்கே வழிகாட்டும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்கீழ் தயாரிக்கப்பட்ட செரிமானத்துக்கு உதவும் தீபாவளி லேகியம் மக்கள் பயன்பாட்டுக்காக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் போன்ற பழங்கால பாரம்பரிய மருத்துவ முறைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான இளநிலை, முதுநிலை படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளை முடித்த மருத்துவர்கள், அவரவர் சார்ந்த துறையில் மட்டுமே பணிபுரிய வேண்டும். அந்த வரம்பை தாண்டி, அலோபதி மருத்துவ முறைகளை பயன்படுத்தி மருத்துவம் பார்ப்பது சட்டப்படி குற்றம்.
அவ்வாறு கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை நலம் மருத்துவமனை மீதும் இதுதொடர்பாக புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அனைத்து மாவட்ட இணை இயக்குநர்கள் தலைமையிலான குழுஅமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், மாநிலம் முழுதும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.