திருச்சி: தீபாவளி பண்டிகையையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்ட நெரிசல் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், ஆண்டுதோறும் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
அதன்படி, நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (நவ.12) கொண்டாடப்படவுள்ள நிலையில், வெளிமாநில மற்றும் மாவட்ட பயணிகள் வசதிக்காக திருச்சியில் வில்லியம்ஸ் சாலை, மன்னார்புரம், பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலக சாலை என 3 இடங்களில் ஏற்கெனவே தயார்நிலையில் இருந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் நேற்று முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி மன்னார்புரம் அணுகு சாலைதற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் வில்லியம்ஸ் சாலையில் இருந்தும், புதுக்கோட்டை வழியாகச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் மன்னார்புரம் பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலக சாலையில் (இலுப்பூர் சாலை) இருந்தும், மதுரை வழியாகச் செல்லும் பேருந்துகள் மன்னார்புரத்தில் ராணுவ மைதானத்தையொட்டிய அணுகுசாலையில் இருந்தும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் வசதிக்காக மத்திய பேருந்து நிலையம் - மன்னார்புரம் - மத்திய பேருந்து நிலையம் இடையே நகரப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன. இங்கு பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், போலீஸாரின் பாதுகாப்பு என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.