உடுமலை: உடுமலை அருகே சாலை, போக்குவரத்து வசதி இல்லாததால் பல ஆண்டுகளாகவே நோய் வாய்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் இருந்து வருகிறது.
உடுமலை அடுத்த ஈசல் திட்டு, குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, மேல் குருமலை, ஆட்டுமலை, பொறுப்பாறு உள்ளிட்ட மலைவாழ் கிராமங்கள் அடர்ந்த வனப் பகுதியின் நடுவே அமைந்துள்ளன. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் சாலை, போக்குவரத்து, மருத்துவம், கல்வி, தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், உடல் சுகவீனம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளுக்காக, அவர்களை தொட்டில் கட்டி நெடுந்தொலைவு தூக்கி செல்ல வேண்டியுள்ளது. அவசர தேவைக்காக நகரப் பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் கூட மலை கிராமங்களுக்கு எளிதாக சென்று வர முடியாது.
இதற்கிடையே, திருமூர்த்தி மலையை ஒட்டியுள்ள பொன்னாலம்மன் சோலை முதல் குழிப்பட்டி வரை சாலை அமைக்க ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். தளி பேரூராட்சி சார்பாக பணிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. ஆனால் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் குழிப்பட்டியைச் சேர்ந்த நாகம்மாள் என்ற பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் உதவியுடன் தொட்டில் கட்டி அழைத்து வரப்பட்டார். அப்பெண் தற்போது உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, “பல ஆண்டுகளாகவே அடிப்படை வசதிகள் இன்றி வசித்து வருகிறோம். அவசர காலங்களில் உயிர் காக்கும் மருத்துவ வசதி கூட எங்களுக்கு கிடைப்பதில்லை. சாலை, வாகன வசதி இல்லாததால் தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலை உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்’’ என்றனர்.