சென்னை: அதிமுக சார்பில் வாக்குச்சாவடி அளவிலான குழு அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்யச் சென்ற மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் பொதுச்செயலாளர் பழனிசாமி வரும் 21-ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்துகிறார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக தென்மாநிலங்களை சேர்ந்த தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் வாக்குச்சாவடி அளவில் குழுக்களை அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டு, அக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றன.
அதிமுக சார்பில் வாக்குச்சாவடி அளவிலான குழுக்களை ஏற்படுத்தி வருவது தொடர்பாக ஆய்வு நடத்த மாவட்ட அளவில் பொறுப்பாளர்களை நியமித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவர்களின் களப்பணி குறித்து ஆய்வு செய்வதற்காக, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் வரும் 21-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் வாக்குச்சாவடி குழு, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் கேட்டறிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.