தருமபுரி தொகுதி மக்களின் நலனுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பேன் என்று அத்தொகுதி மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
தருமபுரி நீதிமன்ற வளாகத்தில் தருமபுரி எம்.பி. அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தை அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக் கான தலைமை அலுவலகம் 24 மணி நேரமும் இயங்கும். மேலும் 04342-270001, 9443262062 என்ற எண்களிலும் பொதுமக்கள் எம்.பி. அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதுதவிர சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகவும் கிளை அலுவலகங்கள் திறக்கப்படும். மத்திய அரசு அறிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை தருமபுரி மாவட்டத்தில் அமைக்கும்படி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இங்கு அமைப்பதன் மூலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாவட்ட மக்கள் பயன்பெறுவதுடன் வேலைவாய்ப்பும் பெருகும்.
தருமபுரி-மொரப்பூர் இணைப்பு ரயில் சாலை தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். முந்தைய திமுக ஆட்சியின்போதே முடிக்கப்பட இருந்த அந்த திட்டத்துக்கு மாநில அரசின் பங்களிப்பு நிதியை வழங்க அப்போதைய முதல்வர் மறுத்துள்ளார். அதனால்தான் இந்த திட்டம் நிறைவேறாமல் போனது. தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் உதவியோடு அந்த திட்டத்தை கொண்டுவர தொடர்ந்து பாடுபடுவேன்.
தருமபுரியில் விவசாயம் சார்ந்த மேம்பாட்டுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து தரப்பினருடனும் ஆலோசிக்க கருத்தரங்கம் ஒன்றை நடத்த உள்ளோம். தருமபுரியில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவியர் பேருந்துகளில் நெரிசலான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் பாலியல் தொடர்பான பல்வேறு சங்கடங்களுக்கும் ஆளாகி வருகின்றனர். எனவே மகளிர் மட்டும் செல்லக்கூடிய பேருந்துகளை அல்லது முன்பாதியை பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்துவோம்.
தருமபுரியில் பாஸ்போர்ட் சேவாதளம் அமைக்க கோரிக்கை வைக்கப்படும். தொகுதி மக்களின் நலன் சார்ந்த பல்வேறு பணிகள் மத்திய, மாநில அரசுகள் மூலம் மேற்கொள்ளப்படும். தேவை ஏற்பட்டால் இம்மாவட்ட மக்களின் நன்மைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திப்பேன் என்றார் அன்புமணி.