தமிழகம்

2-ம் கட்டமாக நாளை ரூ.1000 வழங்கும் பணி: முதல்வர் தொடங்குகிறார்

செய்திப்பிரிவு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ம் கட்டமாக 11 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.1,000 வழங்கும் நடைமுறையை நாளை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் உள்ள குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர்உரிமைத் தொகை திட்டத்தை கடந்த செப்.15-ம் தேதி அண்ணாபிறந்த நாளில் காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில் விடுபட்டவர்கள், ஏற்கெனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டதால் மேல் முறையீடு செய்தவர்கள் என 11.85 லட்சம் விண்ணப்பங்கள் தமிழக அரசால் பரிசீலிக்கப்பட்டது.

இதில், தகுதியானவர்களுக்கு இம்மாதம் முதல் தொகை விடுவிக்கப்பட உள்ளது. இதற்காகபயனாளிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ரூ.1 செலுத்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, புதிய பயனாளிகளுக்கு இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை நவ.10-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், சிலருக்கு ரூ.1000உரிமைத் தொகையை வழங்குவதுடன், அன்றே தமிழகம் முழுவதும் அனைத்து பயனாளிகளுக்கும் உரிமைத் தொகை வங்கிக்கணக்குகளுக்கு விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT